38வது தேசிய விளையாட்டுப் போட்டி

சென்னை:உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்க உள்ள, 38வது தேசிய விளையாட்டுப் போட்டியில், தமிழகம் சார்பில், 393 வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், தமிழக வீரர்களுக்கான அணிவகுப்பு சீருடை மற்றும் உபகரணங்களை வழங்கி, வழியனுப்பி வைத்தனர்.

இந்திய அளவில், மாநிலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட உலகளாவிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.

நடப்பாண்டிற்கான, 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலத்தில், வரும் 28ம் தேதி துவங்கி, பிப்., 14வரை நடக்க உள்ளன. இதில், தமிழகம் சார்பில், 393 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனையரை வழியனுப்பும் விழா, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் இரவு நடந்தது.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ், பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன் உள்ளிட்டோர், வீரர்களுக்கான அணிவகுப்பு சீருடைகளை அறிமுகப்படுத்தி, பின் விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கி, வழியனுப்பி வைத்தனர்.

இப்போட்டியில், தமிழகம் சார்பில், 31 பிரிவுககளில், 393 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என, 102 பேர் என, மொத்தம், 495 பேர் உத்தரகாண்ட் சென்றனர்.