மண்டல கால்பந்து போட்டி கோவில்பட்டி பள்ளி முதலிடம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் கோவில்பட்டி ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் முதலிடத்தை பிடித்தது.
கோவில்பட்டி கால்பந்து கழகம் நடத்திய மண்டல அளவிலான 14 வயது மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திட்டங்குளத்தில் உள்ள ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் ஏ அணியும், காமநாயக்கன்பட்டி புனித அலோசியஸ் உயர்நிலைப் பள்ளி அணியும் மோதியதில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் ஏ அணி முதலிடத்தை பிடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3
மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் அருப்புக்கோட்டை சைவ பானு ஷத்ரியன் மேல்நிலைப்பள்ளி அணியும், ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் பி அணியும் மோதியதில் அருப்புக்கோட்டை மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கால்பந்து கழகச் செயலாளர் தேன் ராஜா தலைமை வகித்தார். ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.கோவில்பட்டி கால்பந்து கழக உறுப்பினர் சுபாஷ் ராஜா வரவேற்புரை வழங்கினார். போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் ஏ அணியினருக்கு எவரெஸ்ட் எம்.ராமச்சந்திரன் நினைவு கேடயத்தை கால்பந்து கழக துணை தலைவர் ஷாம் வழங்கினார்.
தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த அணியினருக்கு பள்ளி இயக்குனர் மோசஸ் பேட்ரிக் ராஜா பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
நிறைவாக தேசிய கால்பந்து வீராங்கனை சரண்யா தேவி போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.